சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.2 திருப்பரங்குன்றம்
பண் - இந்தளம்
கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக்
    கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ்
    சில்பூத மும்நீ ருத்திசை திசையன
சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும்
    அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந்
தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம்
    படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
1
முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர்
    முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக்
கண்டத்தி லுந்தோளி லுங்கட்டி வைத்தீர்
    கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர்
பிண்டஞ் சுமந்தும் மொடுங்கூட மாட்டோம்
    பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும்
அண்டங் கடந்தப் புறத்தும் இருந்தீர்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
2
மூடாய முயலகன் மூக்கப் பாம்பு
    முடைநா றியவெண் டலைமொய்த்த பல்பேய்
பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல்
    பரிசொன் றறியா தனபா ரிடங்கள்
தோடார் மலர்க்கொன்றை யுந்துன் னெருக்குந்
    துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்
றாடா தனவேசெய் தீர்எம் பெருமான்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
3
மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி
    மலையான் மடந்தை மணவாள நம்பி
பஞ்சுண்ட அல்குல் பணைமென் முலையா
    ளொடுநீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
நஞ்சுண்டு தேவர்க் கமுதங் கொடுத்த
    நலமொன் றறியோமுங் கைநாக மதற்
கஞ்சுண் டுபடம் அதுபோக விடீர்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
4
பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர்
    புலால்வா யனபே யொடுபூச் சொழியீர்
எல்லாம் அறவீர் இதுவே அறியீர்
    என்றிரங் குவேன்எல் லியும்நண் பகலுங்
கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதுங்
    கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும்
அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
5
தென்னாத் தெனாத்தெத் தெனாவென்று பாடிச்
    சிலபூ தமும்நீ ருந்திசை திசையன
பன்னான் மறைவா டுதிர்பா சூர்உளீர்
    படம்பக்கங் கொட்டுந் திருவொற்றி யூரீர்
பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர்
    படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர்
அண்ணா மலையே னென்றீரா ரூருளீர்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
6
சிங்கத் துரிமூடு திர்தே வர்கணந்
    தொழநிற்றீர் பெற்றம் உகந்தே றிடுதிர்
பங்கம் பலபே சிடப்பாடுந் தொண்டர்
    தமைப்பற்றிக் கொண்டாண் டுவிடவுங் கில்லீர்
கங்கைச் சடையீர் உங்கருத் தறியோங்
    கண்ணுமூன் றுடையீர் கண்ணேயா யிருந்தால்
அங்கத் துறுநோய் களைந்தாள கில்லீர்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7
பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர்
    பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீருந்
துணிவண்ணத் தின்மேலு மோர்தோல் உடுத்துச்
    சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசி
மணிவண்ணத் தின்மேலு மோர்வண்ணத் தராய்
    மற்றுமற் றும்பல் பலவண்ணத் தராய்
அணிவண்ணத் தராய்நிற் றீர்எம் பெருமான்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
8
கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர்
    மலையின் றலையல் லதுகோயில் கொள்ளீர்
வேளா ளியகா மனைவெந் தழிய
    விழித்தீர் அதுவன் றியும்வேய் புரையுந்
தோளாள் உமைநங்கை யோர்பங் குடையீர்
    உடுகூறை யுஞ்சோறுந் தந்தாள கில்லீர்
ஆளா ளியவே கிற்றீர்எம் பெருமான்
    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
9
பாரோடு விண்ணும் பகலு மாகிப்
    பனிமால் வரையா கிப்பரவை யாகி
நீரோடு தீயும் நெடுங்காற் றுமாகி
    நெடுவெள் ளிடையாகி நிலனு மாகித்
தேரோ டவரை எடுத்த அரக்கன்
    சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம்
ஆரோடுங் கூடா அடிகேள் இதுவென்
    அடியோம் உமக்காட் செயஅஞ் சுதுமே.
10
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்
    றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
    மொழிந்தவாறு மோர்நான்கு மோரொன் றினையும்
படியா இவைகற் றுவல்ல அடியார்
    பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்
    குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com